Sunday, February 15, 2009

ஏமாற்றுதல்

Sunday, February 15, 2009
ஏமாற்றல்

இன்று பலராலும் மிகச் சாதாரணமாக உபயோகப்படுத்தப்படும் சொல்லாகிவிட்டது.

இன்றைய வாழ்வில் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு விதத்தில் ஏமாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். ஒரு சிலரைத் தவிர மீதி அனைவருமோ ஒரு தடவையாது மற்றவரை ஏமாற்றியிருப்பீர்கள். இதனால் அடுத்தவர் வாழ்க்கையில் நீங்கள் எத்தனை பெரிய தவறிழைக்கின்றீர்கள் தெரியுமா?. ஏமாற்றுதலைப் போல கொடிய செயல் வேறு எதுவும் இவ்வுலகில் இல்லை. இன்று சாதாரண கூலித் தொழிலாளியில் இருந்து நன்கு படித்தவர்கள் வரை ஏமாற்றுகிறார்கள். இதில் முக்கிய பங்காற்றுவது அரசியல்வாதிகள். இவர்களைப் போல ஏமாற்றுக்காரர்கள் எங்குமே கிடையாது. இதைப் பற்றி அவர்களிடம் கேட்டால் சாணக்கியத்தனம், ராஜதந்திரம் என்றெலாம் கூறுவார்கள். ஆக ஏமாற்றுதல் என்பது இன்றொரு கலையாகிவிட்டது.

முன்னர் ( ஒரு 200, 300 வருடங்களுக்கு முன் என வைத்துக்கொள்ளுங்கள்) 100 பேருக்கு 1-5 பேர் ஏமாற்றியிருப்பார்கள். இன்று 100 பேருக்கு 98-99 பேர் ஏமாற்றுகிறார்கள். இப்படிப்பட்ட மோசமான நிலை ஏற்படக் காரணம் என்ன?. மிகச் இலகுவான பதில். ஏமாற்றுபவர்கள் நன்றாக வாழுகின்றார்கள். ஏமாற்றப்பட்டவர்கள் மிகவும் கடினமான வாழ்க்கையை வாழுகின்றார்கள். உதாரணத்திற்கு பிந்திய ஆதாரமான சத்யம் நிறுவன அதிபர் ராமலிங்க ராஜூவை எடுத்துக் கொள்ளுங்கள். ஏமாற்றியபோதும் நன்றாக வாழ்ந்தார். கைதாகி சிறையில் இருக்கும் போது ஆடம்பரமான சிறையில் நன்றாகத்தான் இருக்கிறார்.

இப்படி ஏமாற்றியவர்கள் சொகுசாக வாழ்வதால்தான் நல்லவர்கள் கூட மற்றவர்களை ஏமாற்றி வாழ்வதற்கு முனைகின்றனர். விளைவு தற்போது உலகமே ஏமாற்றல் எனும் ஒரு வலையில் சிக்கிவிட்டது.

ஏமாற்றுதல் மூலம் ஏற்பட்ட பின்விளைவினை ஒரு உண்மைச் சம்பவத்தின் மூலம் கூறுகிறேன்.

இது ஒரு ஈழத் தமிழனின் கதை. இங்கு ஈழத்தில் இருக்கும் இளைஞர்களும் யுவதிகளும் எப்படியாவது வெளிநாட்டிற்குச் செல்லவேண்டும் எனத் துடித்துக் கொண்டிருப்பவர்கள். காரணம் இந்நாட்டுச்சூழல்.

அப்படித்தான் நம் கதாநாயகன் செல்வாவும் வெளிநாட்டிற்குச் செல்ல ஆசைப்பட்டான். அவனது கல்வி சாதாரண தரம் வரையில்தான்.(அதாவது +1). அதனால் கல்வி விசாவில்(Student Visa) அவனால் வெளிநாட்டிற்குச் செல்லமுடியவில்லை. அப்போதுதான் வெளிநாட்டிற்கு ஆட்களை கள்ளமாக அனுப்பும் தரகர் ஒருவர் செல்வாவை அணுகினார். அவரின் பேச்சில் மயங்கிய செல்வாவும் வெளிநாடு செல்ல முடிவெடுத்தான். செல்வாவின் தந்தை ஒரு விவசாயி. தாய் வீட்டில். செல்வா ஒரே மகன். மகனது ஆசைக்கு குறுக்கே நிற்க அவர்கள் விரும்பவில்லை. அதனால் தமது நிலம், வீடு முதலியவற்றை விற்றும் கடன் வாங்கியும் சுமார் 10 லட்சத்தை தரகரிடம் கொடுத்தனர். ஒரு நல்ல நாளில் செல்வாவும் புறப்பட்டான். முதலில் மலேசியா சென்று பின்னர் கனடா செல்வதாக ஏற்பாடு. மலேசியா சென்ற செல்வா அங்கு ஒரு சிறிய வீட்டில் தங்க வைக்கப்பட்டான். 1 வாரத்தில் கனடாவிற்கு ஏற்றுவதாகச் சொல்லி தரகர் சென்றார். சென்றவர் சென்றவர்தான் திரும்பிவரவேயில்லை. கிட்டத்தட்ட 1 மாதத்தில் அங்கு போலிஸில் பிடிபட்டு ஈழத்திற்கு திருப்பியனுப்பப்பட்டான். இங்கும் சில காலம் சிறையில் இருந்துவிட்டு தன் சொந்த ஊருக்குச் சென்றான். நடந்தவற்றைக் கேள்விப்பட்ட தந்தைக்கு சித்தசுவாதீனம்(பைத்தியம்) ஆகிவிட்டது. தாயும் அதிர்ச்சியில் முடங்கிவிட்டாள். சரி எல்லாவற்றையும் மறந்து விவசாயம் செய்யலாம் என்றால் நிலம் இல்லை. செல்வா கூலித் தொழிலாளி ஆகிவிட்டான். சில காலத்தின் பின்னர் போரினால் அக்குடும்பம் சிதறியே போய்விட்டது.

இதில் செல்வா குடும்பத்தினரின் குற்றம் என்ன?.

ஓ கள்ளமாக வெளிநாட்டிற்கு அனுப்பியது குற்றம் என்கிறீர்களா. இங்கு ஈழத்தின் நிலை தெரிந்த எல்லோரும் கள்ளமாக அனுப்புவது குற்றம் எனக் கூறமாட்டார்கள். ஆக அது குற்றமில்லை.

குற்றன் செய்தவன் அந்த தரகன். கூசாமல் பொய்களைக் கூறி எப்படி ஏமாற்றியிருக்கிறான். இவனுக்கு மனசாட்சியே இல்லையோ. நமக்குத் தெரிந்து செல்வா அவனிடம் சிக்கினான். இன்னும் எத்தனை பேர் அவனிடம் சிக்கியிருப்பார்களோ....

இதைப் பற்றி ஒரு நாள் தெரிந்தவர்களோடு பேசியபோது ஒருவர் கூறினார் " ஏமாற்றுபவனை விட ஏமாறியவன்தான் குற்றவாளி " என்று. என்ன நியாயம் இது. இப்படிப்பட்ட தவறான வாக்கியங்களால்தான் ஏமாற்றுபவர்கள் தப்பிக்கின்றார்கள். என்னைப் பொறுத்தவரை ஏமாற்றுபவன் பாவி, ஏமாறுபவன் அப்பாவி. ஏமாற்றுபவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனைகள் அளிக்கப்பட வேண்டும். அப்படிச் செய்தால்தான் ஏமாற்றுக்காரர்களை ஒழிக்கமுடியும்.

பல குற்றங்களின் மூல காரணி இது. பொய் பேசல், வார்த்தை மாறல், நம்பிக்கைத் துரோகம், நயவஞ்சக புத்தி இவற்றின் மொத்த உருவம்தான் ஏமாற்று.

இந்த ஏமாற்றுதலால் தனிமனிதர்கள் மட்டுமல்ல பல நாடுகளும் சின்னாபின்னமாகின்றன. உதாரணம்- அமெரிக்கா-ஈராக். இன்று இந்த இரு நாடுகளிலும் நிம்மதியில்லை.

எனவே இவ்வுலகில் இருந்து முதலில் ஒழிக்கப்படவேண்டியது ஏமாற்றல் எனும் ஒரு கொடிய நோய். நாமும் நம் சுற்றமும் இக்கொடிய நோயை விரட்டுவோமானால் நாளைய உலகம் நிச்சயம் மிகப் புனிதமாக விடியும்.

( இதனை விரிவாக எழுதலாம் என்றால், நிச்சயம் 1 வருடம் ஆனால் கூட என்னால் எழுதி முடிக்கமுடியாது. அதனால் சுருக்கமாக முடித்துவிட்டேன்.)

1 comments:

ramesh said...

அடுத்தவர்களுக்கு நம்பிக்கை துரோகம் இழைப்பது தவறு.

Post a Comment